Friday, March 23, 2012

களியக்காவிளை அருகே லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது


களியக்காவிளையை அடுத்த அதங்கோடு காக்க தூக்கி பகுதியை சேர்ந்தவர் ராஜன்(வயது48). லாரி வைத்து மணல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுனில் என்பவருக்கு வீடு கட்டு வதற்காக 2 லாரிகளில் மணல் கொண்டு சென்றார். வீட்டு அருகே மணலை இறக்கி கொண்டிருந்த போது விளவங்கோடு தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வா அங்கு வந்தார். அவர் ராஜனிடம் மணலை இப்போது இங்கு இறக்கி விட்டு பின்னர் கேரளாவுக்கு கடத்த பார்க்கிறாயா? என கூறி லாரிகளை பறிமுதல் செய்ய முயன்றார்.

தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வா
அதற்கு ராஜன் வீடு கட்டு வதற்காக மணல் கொண்டு வந்தததை கூறி அதற்கான ஆவணங்களை காட்டினார். அதை கண்டுகொள்ளாத தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வா 2 லாரிகளையும் பறிமுதல் செய்து குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து ராஜன் தாலுகா அலுவலகம் சென்று தமது லாரிகளை விடுவிக்கு மாறு கேட்டார். அதற்கு தாசில்தார் லாரிகளை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும், தொடர்ந்து மணல் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் மாதம் ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த ராஜன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தர்ராஜனிடம் புகார் செய்தார். லஞ்சம் கேட்ட தாசில்தாரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை ராஜனிடம் கொடுத்து தாசில்தாரிடம் கொடுக்குமாறு கூறினர்.

நேற்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பணத்துடன் ராஜன் தாலுகா அலுவலகம் சென்று பணம் கொண்டு வந்திருப்பதாக தாசில்தாருக்கு போன் செய்தார். அவர் அருகில் உள்ள குடியிருப்புக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினார்.

அதன்படி ராஜன் தாசில்தார் வீட்டுக்கு சென்று லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சாம்செல்வின் ஜோஸ்வாவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இரவு 10 மணி வரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

பின்னர் ராஜாக்கமங்கலம் வைராகுடியிருப்பில் உள்ள தாசில்தாரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இரவு 11 மணி முதல் 12 மணி வரை சோதனை நடந்தது. கைதான தாசில்தார் சாம் செல்வின்ஜோஸ்வா இன்று நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நன்றி  :மாலை மலர்

0 comments:

Post a Comment

Updates Via E-Mail